திமுக உட்கட்சித் தேர்தல் – புதிய அறிவிப்பு வெளியீடு

திமுக உட்கட்சித் தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. திமுக 15வது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா…

திமுக உட்கட்சித் தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திமுக 15வது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா காரணமாக இந்த ஆண்டு வரை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதற்கான முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 72 மாவட்டங்களில் 71 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 7 மாவட்டங்களுக்கு புதிய செயலாலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளரும்,  நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்றிய – நகர – நகரிய – பேரூர் – பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழு கூட்டம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.

திமுக தலைவர், பொதுச்செயலாலர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். இந்த பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 7ஆம் தேதி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். அனைத்து நடைமுறைகளிலும் கழகத் தேர்தல் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.