உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் 10 அடி உயர முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை காணாத வெற்றியை திமுக பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். கூட்டணி கட்சியினரின் இடங்களில் வெற்றி பெற்றோர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கூறிய அவர், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிறு தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர் மக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். நல்லாட்சி வழங்குவோம் என்ற தேர்தல் உறுதிமொழியின் காரணமாக மக்கள் அமோக ஆதரவை வழங்கி இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, தூத்துக்குடிக்கு செல்லும் வழியில், விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே ராம்கோ நிறுவனம் உருவாக்கிய சுற்றுச்சூழல் பூங்காவை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை முதலமைச்சர் பார்வையிட்டார்.
இதனிடையே, தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ள அறைகலன் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் அறைகலன் பூங்கா நாட்டிலேயே முதன்முறையாக அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







