திமுக அரசின் வரி வருவாய் 16% வீழ்ச்சி: நிதிநிர்வாகத்தில் திமுகவின் தோல்வி நிரூபணம் – அன்புமணி!

தமிழகத்தின் நிதிநிலையை திமுக அரசு சீரழித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “2025 – 26ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய், 9 மாதங்களுக்கான இலக்கை விட 16% வீழ்ச்சியடைந்திருக்கிறது. அடுத்த இரு மாதங்களுக்கு இதே நிலை தொடரும் பட்சத்தில் திமுக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, கடன் சுமை உள்ளிட்ட அனைத்தும் பெருமளவில் அதிகரிக்கும் என்று தெரிகிறது. தமிழகத்தின் நிதிநிலையை திமுக அரசு சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் தலைமைக் கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி திசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் தமிழக அரசு ரூ.1.39 லட்சம் கோடியை சொந்த வரி வருவாயாக ஈட்டியிருக்கிறது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ஈட்டப்பட்ட ரூ.1.31 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது 6% அதிகம் என்று கூறப்பட்டாலும் கூட, நடப்பாண்டிற்கான தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் இலக்குகளுடன் ஒப்பிடும் போது 16 விழுக்காடு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் 2025&26ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் இலக்கு ரூ. 2 லட்சத்து 20,894 கோடி ஆகும். இதில் ஜி.எஸ்.டி வரி, மதிப்புக்கூட்டு வரி, கலால் வரி, முத்திரைத் தாள் தீர்வை, வாகன வரி ஆகியவை அடங்கும். ஓராண்டுக்கான இலக்கில் 9 மாதங்களில் ரூ.1 லட்சத்து 65,670 கோடி வருவாயை அரசு ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், அதை விட ரூ.26,670 கோடி, அதாவது 16% குறைவாகவே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதே போல் கலால் வரி மூலம் கிடைக்க வேண்டிய ரூ.9,708 கோடி வருவாயில், ரூ.8748 கோடி மட்டுமே கிடைத்திருக்கிறது. இது 9.88% வீழ்ச்சி ஆகும். எனினும், முத்திரைத் தாள் தீர்வை, பத்திரப் பதிவு கட்டணம் ஆகியவை கிட்டத்தட்ட இலக்கை எட்டியுள்ளன. இந்த வகையில், ரூ.19,581.75 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.18.821 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது. இது இலக்கை விட 3.88% மட்டுமே குறைவு ஆகும். சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை அதிகாரப்பூர்வமற்ற வகையில் 30% வரை உயர்த்தி பதிவு செய்ததன் மூலம் இந்த வருவாய் இலக்கு கிட்டத்தட்ட எட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நடப்பாண்டின் மார்ச் மாதம் வரை இதே நிலை நீடித்தால் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 85,000 கோடி என்ற அளவுக்குள் முடங்கி விடும் ஆபத்துள்ளது. இது 2024-25ஆம் ஆண்டின் சொந்த வரி வருவாயான ரூ.1.92 லட்சம் கோடியை விட மிகவும் குறைவாகும். கடந்த ஆண்டின் சொந்த வரி வருவாயை விட நடப்பாண்டில் ரூ.14.60% கூடுதல் வருவாய் ஈட்ட திமுக அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், கடந்த ஆண்டின் வரி வருவாயைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

வழக்கமாக ஒரு நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில் வரி வசூல் சற்று அதிகமாக இருக்கும் என்றாலும் கூட, நிதிநிலை அறிக்கை மதிப்பீடான ரூ.2.20 லட்சம் கோடியை அடைவதற்கு வாய்ப்பே இல்லை. இது ஒட்டுமொத்த நிதி நிலைமையில் மிகமோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் வீழ்ச்சி அடைந்ததற்கு பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட எந்தக் காரணத்தையும் கூற முடியாது. ஏனெனில், இதே காலத்தில் மத்திய அரசு அதன் வரி வருவாய் வசூல் இலக்குகளை எட்டியிருக்கிறது. அதன் பயனாக மத்திய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.43,516.12 கோடியில், சுமார் 98% தொகையை, அதாவது ரூ.42,346 கோடியை தமிழ்நாடு அரசுக்கு விடுவித்திருக்கிறது. அப்படியானால், வரி வருவாய் வீழ்ச்சிக்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை தான் முதன்மை காரணம்.

தமிழக அரசின் வரி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இருந்தாலே, ரூ.41,635 கோடி வருவாய் பற்றாக்குறையும், ரூ.1,06,963 கோடி நிதிப்பற்றாக்குறையும் ஏற்படும். இப்போது அரசின் வரி வருவாய் சுமார் 16% அளவுக்கு குறைந்துள்ள நிலையில், மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கும் நோக்குடன் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகை, கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவற்றால் கூடுதலாக ரூ.15,000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் மதிப்பிடப்பட்டதை விட ரூ.35,000 கோடி வரை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இதனால், நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு வாங்கத் திட்டமிட்டிருந்த மொத்தக் கடனின் அளவு ரூ.1.62 லட்சம் கோடியிலிருந்து சுமார் ரூ. 2 லட்சம் கோடி என்ற அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வருவாய்ப் பற்றாக்குறையை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நிதிநிலைமையை சீரழித்ததையும், கடந்த 70 ஆண்டுகளில் தமிழ்நாடு வாங்கிய மொத்தக் கடனையும் விட அதிகக் கடனை வாங்கிக் குவித்து தமிழ்நாட்டை இந்தியாவின் மிக அதிக கடன்கார மாநிலமாக மாற்றியதையும் தவிர வேறு எதையும் செய்யவில்லை. தங்களைக் கடன்காரர்களாக மாற்றிய திமுக அரசை பழிதீர்க்கும் வகையில், வரும் தேர்தலில் அக்கட்சிக்கு தமிழக மக்கள் படுதோல்வியை பரிசாகத் தருவார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.