சிலிண்டருக்கான மானியத்தை வழங்கி திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் -அண்ணாமலை

ஜனவரி முதல் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சமையல் சிலிண்டருக்கான மானியத்தை வழங்கி திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இது…

ஜனவரி முதல் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சமையல் சிலிண்டருக்கான மானியத்தை வழங்கி திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 5 கிலோ அரிசியை கிலோவுக்கு 3 ரூபாய் விலையில் மாநில அரசுக்கு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் 3 கோடி 60 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என கூறியுள்ள அவர், 2023ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் மாதம் வரை, 2 லட்சம் கோடி ரூபாய் செலவில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ விலையில்லா அரிசியை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க உள்ளதால், இனியும் காலம் தாழ்த்தாமல், ஜனவரி முதல் பெட்ரோலுக்கு 2 ரூபாய், டீசலுக்கு 4 ரூபாய், வீட்டு உபயோக சிலிண்டர் ஒவ்வொன்றுக்கும் 100 ரூபாய் மானியத்தை வழங்கி திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.