தி.மு.க அரசாங்கம் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களை திரும்பத் திரும்ப கைது செய்து பா.ஜ.க வின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேசினார்.
பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் மாற்றங்கள் செய்வதில் தீவிரம் காட்டியுள்ளார். உலக நாடுகளை கொரோனா பாதிப்பு அச்சுறுத்திய சூழலில் இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடித்து இலவசமாக தடுப்பூசி வழங்கி பாதுகாத்த தலைவராக பிரதமர் உள்ளார். உணவு தானியம், தடுப்பூசியை தாண்டி, சிறு குறு தொழில்களுக்கு உதவியுள்ளார். பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்த அனைவருக்கும் வங்கி திட்டம் ஏற்படுத்தினார். டிஜிட்டல் பொருளாதார சூழல் உருவாக்கியுள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிக பலனடைந்து உள்ளது. முத்ரா கடன் தமிழகத்திற்கு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. செல்வமகள் திட்டம், அனைவருக்கும் கழிப்பறை, அனைவருக்கும் வீடு ஆகியவற்றில் தமிழகம் பயனை அடைந்ததில் முன்னிலையில் உள்ளது. தொழில் துறையில் 3100 கோடிக்கு மேலாக முதலீடு வந்துள்ளது.
இஸ்லாமிய பெண்களுக்கு திருமண உறவில் பாதுகாப்பு கிடைத்துள்ளது. மத்தியில் பதினோரு பெண் அமைச்சர்களுக்கு வாய்ப்பு, இராணுவத் துறையிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தி.மு.க எந்த வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். ஆளும் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு வாக்குறுதிகளை கொடுக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.
பா.ஜ.க ஆதரவாளர் கார்திக் கோபிநாத் கைது தொடர்பாக பேசிய வானதி சீனிவாசன், திரும்பத் திரும்ப பா.ஜ.க. ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறீர்கள் என்று தான் நாங்கள் பார்க்கிறோம். கருத்துக்களை பொது வெளியில் சட்டத்திற்கு உட்பட்டு சொல்வதற்கும், அதேபோல விசாரணை முடிந்த நிலையிலும் நள்ளிரவில் தீவிரவாதியை போல கைது செய்வது மாநிலத்தின் கருத்து சுதந்திரமா..? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி முயற்சிகள் மூலம் பா.ஜ.க வின் ஆதரவாளர்களை முடக்கி விடலாம் என்று நினைத்தாள் அந்த கனவு ஒரு போதும் பலிக்க போவதில்லை.
கர்நாடகாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பா காவிக்கொடி ஒருநாள் தேசிய கொடியாக மாறும் என தெரிவித்ததற்கு, தேசியக் கொடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த நாட்டில் மாறாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருப்பது ஒருபோதும் பா.ஜ.க மாற்ற நினைக்காது என தெரிவித்தார்.








