மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம், நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை விசிகவுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக்கிற்கு 3, மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. 8ஆம் தேதிக்குப் பிறகு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாளை காலை 9 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்கூட்டம் குறித்து, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும், என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.







