திமுக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

திமுக 15ஆவது உட்கட்சித் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் புதிய  செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா…

திமுக 15ஆவது உட்கட்சித் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் புதிய  செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா காரணமாக இந்த ஆண்டு வரை நடைபெற்று வருகிறது. மாவட்ட அவைத் தலைவர், செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் செப்டம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் கலை உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை பெற்றனர்.

அதிமுக ஆட்சியின் போது எந்தவொரு அரசு பதவியில் இல்லாமல் கட்சிக்காக உழைத்த பழைய திமுக நிர்வாகிகளுக்கு, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உட்கட்சிப் பொறுப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும், இளைஞரணியைச் சார்ந்த நிர்வாகிகள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேற்று திமுக மாவட்டச் செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கு செல்லத்துரை மற்றும் தனுஷ்குமார் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை தெற்கு, கோவை வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாமக்கல் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 7 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவது குறித்து என நியூஸ்7 தமிழ் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியே செய்தி வெளியிட்டிருந்தது.

கரூர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதா ஜீவன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயளாளராக அமைச்சர் எ.வ.வேலு, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் நாசர், சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.