இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப் பயணமாக வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்நாட்டு அணி 3 டி20, 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி, டி20 தொடர் தொடங்கியது. கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களில் சுருண்டது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இல்ககுடன் களமிறங்கிய இந்தியா 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஹர்ஷல் படேல், சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அக்ஸர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், சூர்ய குமார் யாதவும் அரை சதம் பதிவு செய்து வெற்றிக்கு பெரும் பங்காற்றினர்.
இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் எதுவுமின்றியும், முன்னாள் கேப்டன் கோலி 3 ரன்களில் நடையைக் கட்டினர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ககிசோ ரபடா 1 விக்கெட்டையும், அன்ரிச் நார்ட்ஜே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இவ்வாறாக 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
ஆட்டநாயகனாக அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் அக்டோபர் 2 ம் தேதி அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் நடைபெறவுள்ளது.









