ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாமல் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கி திமுகவினர் வாக்கு சேகரிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசுகையில், கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி கொடுத்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த பணிகள் இதுவரை நடைபெற வில்லை. ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். இதனால், வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின்னோக்கி செல்கிறது.
8 மாத காலமாக திமுக ஆட்சி செய்து வருகிறது. ஆனால் அந்த ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாமல் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சிக்கின்றனர். அதோடு, காவல்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து காவல்நிலையத்தில் கட்டபஞ்சாயத்துகளை மீண்டும் நடத்த துவங்கியுள்ளனர்.
மேலும், திமுக அளித்த 500 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டிய அண்ணாமலை, பாஜகவிற்கு எம்மதமும் சம்மதம் என தெரிவித்தார்.








