தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 12 ஆயிரத்து 607 பதவிகளுக்கு, 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பாளர்கள் மரணமடைந்ததால் காஞ்சிபுரம் மாநகராட்சி, வத்திராயிருப்பு பேரூராட்சியில் 1 வார்டிலும் தேர்தல் விதிமீறலால் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியின் 12-வது வார்டிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியில் 4 பேரும், நகராட்சியில் 18 பேரும், பேரூராட்சியில் 196 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
வாக்குப்பதிவுக்காக மாநகராட்சிகளில் 15,158, நகராட்சிகளில் 7417, பேரூராட்சிகளில் 8454 என மாநிலம் முழுவதும் 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாக்குச்சாவடிக்கு 4 பேர் வீதம் 1,33,000 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமீறல் நடந்தால் 18004257072, 18004257073, 18004257074 கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








