திமுகவும் ஊழலும் பிரித்துப் பார்க்க முடியாதவை – எடப்பாடி பழனிசாமி….!

திமுகவையும் ஊழலையும் பிரித்துப் பார்க்கவே முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  சிவகாசி தொகுதி வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார். சிவகாசி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது ;

சிவகாசி என்றால் பட்டாசு தொழில்தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசு உலக அளவில் பிரசித்தி பெற்றது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்தபோது அப்போது அமைச்சராக இருந்த கே டி ராஜேந்திர பாலாஜியின் 20 எம்.பிக்களின் உதவியோடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தொழிலை பாதுகாக்க போராடினார்

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை காவேரி குண்டாறு திட்டத்தின் மூலமாக கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு விவசாய மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்த முன் வந்தது. ஆனால் இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு வேண்டுமென்றே முடக்கியது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காவேரி குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்

திமுக அரசு தமிழ் நாட்டின் ஏழை மக்களுக்காக ஒரு திட்டத்தைக் கூட கொண்டுவரவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.

சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்க முடியாத கையாளாகாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். நீதிமன்ற உத்தரவிட்டும் இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தில் உள்ளவர்களை மட்டும் கவனத்தில்கொள்கிறாரே தவிர நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளவில்லை.

தமிழகத்தில் கஞ்சா பல வடிவத்தில் புழங்கும் கஞ்சா புழகத்தால் பள்ளி கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. இரண்டு வயது சிறுமிகளை கூட காமக்கொடூரர்கள் விட்டு வைப்பதில்லை. ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியதால் இதுபோன்ற மோசமான செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது. திமுக வேண்டாம், அதிமுக ஆட்சிதான் வேண்டும் என பெண்கள் குழந்தைகள் சொல்ல துவங்கி விட்டார்கள்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தெரிவித்த 525 தேர்தல் வாக்குறுதியில் 4ல் 1 பங்கை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஏற்கனவே சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது மீண்டும் பொய்யான தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் அறிவித்துள்ளார்

அதிமுக ஆட்சியில் இருந்ததை விட திமுக ஆட்சியில் 67% மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 6 சதவீதம் வீட்டு வரி உயர்த்தப்படும் என தெரிவித்த திமுக 100% வரியை உயர்த்தியுள்ளது. குப்பைக்கு வரி போட்டு மக்களுக்கு மிகப்பெரிய வரி சுமையை திமுக அரசாங்கம் கொடுத்துள்ளது. நகர்புற வளர்ச்சி குடிநீர் வளங்கள் உள்ளிட்ட துறைகளில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து அமலாக்கத்துறை உதரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சி இந்தியாவிற்கே முதன்மையான ஆட்சி என முதலமைச்சர் சொல்லி வருகிறார். ஊழல் செய்வதில் இந்திய அளவில் நம்பர் ஒன் ஆட்சி, திமுக ஆட்சி. ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். ஊழலையும் திமுகவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.