“திமுக, அதிமுகவால் இன்று வரை கால்வாய் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை” – சீமான் விமர்சனம்!

58 கால்வாய் பிரச்சனையை திமுக, அதிமுகவால் இன்று வரை தீர்க்க முடியவில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிராமி-யை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியவர், “நீண்ட காலமாக இந்த நாட்டில் நடக்கும் அரசியல் பொறுக்க முடியாமல் கொதித்து எழுந்த தமிழ் பிள்ளைகள் நீங்கள். திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இன்று வரை 58 கால்வாய் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. இதே உசிலம்பட்டியில், ஆண்டிபட்டியில், தேனியில், நீ வாழும் ஊரில் படித்தவன், படிக்காதவன் என எல்லோருக்கும் அரசு வேலை தருவேன்.

படிக்காதவனே இல்லை என்பதை உருவாக்குவேன். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி தரமான கல்வியை தருவேன். கல்வியில் இருந்து தான் நாட்டை கட்டமைக்க முடியும். அந்த செல்வத்தை என் பிள்ளைகளுக்கு கொடுப்பேன். ஏன் அரசியல் தலைவர்கள் அரசு மருத்துவமனைக்கு போகவில்லை, அவர்கள் கட்டியது தானே. தரமான மருத்துவமனையாக அரசு மருத்துவமனையை கொண்டு வருவேன்.

வேளாண்மை செய்து என் பிள்ளைகளுக்கு வருவாயை பெறுக்குவேன். டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக் கடையை திறப்பேன். வேலை இல்லை என்ற சொல்லுக்கு வேலையை உருவாக்குவேன். என் குலதெய்வம் மீது ஆணையிட்டு சொல்கிறேன், நான் ஏமாற்ற மாட்டேன் நான் நினைத்திருந்தால் பேரம் பேசியவர்களை நாடி சென்றிருக்க மாட்டேனா. ஓட்டுக்கு காசு கொடுப்பவனும், இலவசம் கொடுப்பவனும் ஏமாற்றுகிறான் என தெரியவில்லையா, உன் வீட்டை திருட வந்தவன் 2 ஆயிரம் கொடுத்துவிட்டு கொள்ளையடித்து செல்வான். எல்லாவற்றுக்கும் நல்லதை, நல்ல கடையை தேர்ந்தெடுக்கும் மக்கள் நல்ல தலைவனை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை.

வாக்கு செலுத்த போகும் போது தெய்வமாக நிற்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரையும், பி.கே.மூக்கையாத்தேவரின் முகத்தை பார்த்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள். திருடர்களிடத்தில் ஒப்படைக்க மனம் வராது. உங்கள் வாக்கை அநீதிக்கு எதிராக வாக்களியுங்கள். தமிழ்நாட்டில் இளம் வயது வேட்பாளர் என் மகள் அபிராமி. காங்கிரஸ் கையை விடுங்கள், என் மகளின் கையை பற்றுங்கள். உசிலம்பட்டியிலிருந்து ஒரு வரலாற்று மாற்றத்தை உருவாக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.