“நீட் தேர்வு மாபெரும் உயிர்கொல்லும் Scam” – உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வை ஒழிப்பிற்கு திமுக அரசு எடுத்த சட்ட போராட்டங்களை த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி (நாளை) நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்நிலையில் நாளை மறுதேர்வு எழுத இருந்த சேலத்தை சேர்ந்த கோபிகா என்ற மாணவி தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக்கொண்டார். இவர் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வு உட்பட மூன்று முறை நீட் தேர்வு எழுதி அதில் இரண்டு முறை தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கோவையை சேர்ந்த மாணவன் நீட் தேர்வு தோல்வி பயத்தில் உயிரிழந்த நிலையில் தற்போது சேலம் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சேலம் மாணவி உயிரிழப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.

மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.

கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் – சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.

இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி – தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”. என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.