மது ஒழிப்பை கட்டுப்படுத்துவதில் திமுகவும் அதிமுகவும் தோல்வியடைந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் பேருந்து நிலையம் முன்பு பாமக கட்சி கொடியை ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதனை தொடர்ந்து பாமக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஷேக்மூகைதீன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், மது ஒழிப்பை கட்டுப்படுத்துவதில் திமுகவும், அதிமுகவும் தோல்வியடைந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம், மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற அரசு கடுமையான சட்டங்களை இயற்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பவானி வாய்கால் காங்கிரீட் தளம் அமைப்பதில் இரண்டு தரப்பிலும் சமரசம் ஏற்படாமல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் அரசு நல்ல முடிவை எட்ட வேண்டுமானால் விஞ்ஞான ரீதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகளை தொடங்குவதே சரியான முடிவாக இருக்கும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது என்று கூறினார்.







