லாக்டவுன் கக்கண்டி, சுனாமி ராய், கார்கில் பிரபு – இப்படியெல்லாம் கூட பெயர் வைப்பார்களா?

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள வேளையில் இந்தியாவையே உலுக்கிய சில நிகழ்வுகளை பெயர்களாக கொண்டவர்களை தற்போது பார்க்கலாம். ஆசாத் கபூர் 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி பிறந்தவர் தான் ஆசாத்…

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள வேளையில் இந்தியாவையே உலுக்கிய சில நிகழ்வுகளை பெயர்களாக கொண்டவர்களை தற்போது பார்க்கலாம்.

ஆசாத் கபூர்

1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி பிறந்தவர் தான் ஆசாத் கபூர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்த பெயரால் தன்னை பலரும் ஆண் என்று தவறாக நினைத்துக் கொண்டதாகக் கூறும் அதே நேரம், உன் பிறந்த நாளை நாடே கொண்டாடும் என நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் புன்னகை ததும்ப கூறுகிறார் 75 வயதான ஆசாத் கபூர்.

எமர்ஜென்சி யாதவ்

47 வயதான எமர்ஜென்சி யாதவ் 1975ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி பிறந்தவர். எமர்ஜென்சி எனும் துயர் மிகுந்த, வரலாற்றின் கருப்பு பக்கத்தை மக்கள் ஒரு போதும் மறக்கக் கூடாது என்பதற்காகவே தனது தந்தை இந்த பெயரை சூட்டியதாகக் கூறுகிறார் எமர்ஜென்சி யாதவ். அரசியல்வாதியான எமர்ஜென்சி யாதவின் தந்தை ராம் தேஜ் யாதவ், மகன் பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பு கைது செய்யப்பட்டு 22 மாதங்கள் கழித்தே விடுவிக்கப்பட்டார்.

கார்கில் பிரபு

23 வயதான கார்கில் பிரபு 1999ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையேயான கார்கில் போரின் போது பிறந்தார். சிறு வயதிலேயே தந்தை இறந்ததால் வளர்ந்த பிறகே கூகுளில் தேடி கார்கில் பற்றி அறிந்து கொண்டதாகக் கூறுகிறார் கார்கில் பிரபு. இதுவரை கார்கிலுக்கு சென்றதில்லை என்றும் போர்கள் மீது தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

சுனாமி ராய்

அந்தமானைச் சேர்ந்த 17 வயதான சுனாமி ராயின் பெயரே கூறும் அவர் பிறந்த கதையை. சுனாமியின் போது எந்த விதமான மருத்துவ வசதிகளின் இல்லாத நிலையில் ஒரு மலை உச்சியில் உயிருக்குப் போராடிய நிலையில் தன் மகனைப் பெற்றெடுத்தார் மவுனிதா ராய்.

இதனால் தற்போது வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகிறார் மவுனிதா ராய். இந்தப் பெயரின் காரணமாக தன் மகனை அவனது நண்பர்கள் கிண்டல் செய்தாலும், தன்னைப் பொறுத்த வரை சுனாமி என்ற வார்த்தை நம்பிக்கையையும் உயிர் பிழைத்திருக்கும் எண்ணத்தையும் தரவல்லது என்கிறார் மவுனிதா ராய்.

கேஷியர் நாத்

5 வயது சிறுவனான KHAZANCHI நாத் எனப்படும் கேஷியர் நாத். 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிறந்தார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கேஷியர் நாத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தினர். ஏழ்மையான அவர்களின் குடும்பம் கேஷியர் நாத்தின் வருகைக்குப் பிறகே சொந்த வீடு கட்டி உள்ளது. கேஷியர்நாத் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்ததாக அவர்கள் நம்புகின்றனர்.

லாக்டவுன் கக்கண்டி

2020ம் ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் பிறந்தவர்தான் 2 வயதுக் குழந்தையான கக்கண்டி. உத்தரப் பிரதேச மாநிலம் குக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த கக்கண்டி சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிரபலம். கக்கண்டியின் பிறப்பு மருத்துவர்கள் இல்லாததால் மிகவும் சிக்கலாக இருந்ததாகக் கூறுகிறார் அவரது தந்தை பவன் குமார். பலர் இந்தப் பெயருக்காக தன் மகனை கிண்டல் செய்தாலும், யாராலும் மறக்க முடியாத பெயராக இது இருக்கும் என்கிறார் பவன் குமார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.