“நீட் விலக்கு தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு!” – பிரேமலதா விஜயகாந்த்

நீட் விலக்கு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய முக்கிய தீர்மானங்களுக்கு தேமுதிக தனது ஆதரவை பதிவு செய்வதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026-ஐ (FCRA) அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் தனி தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அதேபோல முன்னதாக நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தை தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரித்து பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு கோரும் அரசினர் தீர்மானத்திற்கு தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பது ஒட்டுமொத்த மக்களின் கருத்து என்றால், அதை நிச்சயம் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது மாணவி அனிதாவின் இறுதி நிகழ்வில், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட மேடையில் நின்று மரியாதை செலுத்தியவர் கேப்டன் விஜயகாந்த் என்றும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார். மேலும், நீட் விலக்கு தீர்மானத்தை தேமுதிக முழுமையாக வரவேற்பதாக தெரிவித்த அவர், தமிழ் மொழிக்கு ஆதரவான தீர்மானத்திற்கும் தங்களது முழு ஆதரவு உண்டு என கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என அப்போது கோரிக்கை வைத்ததாகவும், அந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு அவைத் தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தீர்மானத்திற்கு முழு ஆதரவு தெரிவித்த பிரேமலதா, தமிழ்த்தாய் வாழ்த்து தான் வேண்டும் என அனைவரும் கேட்கின்றனர். அதேபோல் நீட் வேண்டாம் எனவும் மக்கள் விரும்புகின்றனர். அதனை நாமும் ஏற்கிறோம்” என தெரிவித்தார். விஜயகாந்த் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்ந்தவர் என்றும், கதர் ஆடை மற்றும் தமிழ் மொழியைத் தவிர வேறு எதையும் அவர் பெரிதாகக் கருதவில்லை என்றும் பிரேமலதா குறிப்பிட்டார். மேலும், சட்டப்பேரவையின் பின்புற வாசல் வழியாக எந்த தவறான செயல்பாடுகளும் நடைபெறாத வகையில் அரசு கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நீட் விலக்கு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய முக்கிய தீர்மானங்களுக்கு தேமுதிக தனது ஆதரவை சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.