தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தேர்தலின் போது “அனைவருக்கும் 500 யூனிட் இலவச மின்சாரம்” என்று தம்பட்டம் அடித்த தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்கள், கல்விக் கூடங்கள் என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தொடர் மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது.
தமிழக முதலமைச்சர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து, வரலாறு காணாத அளவிற்கான மின் தட்டுப்பாட்டை தமிழகம் எதிர்க்கொண்டு வருகிறது. வெக்கை தாங்க முடியாமல், இரவில் உறங்க முடியாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏழை, எளிய மக்களின் உயிர்காக்கும் இடங்களான அரசு மருத்துவமனைகளில் “மொபைல் டார்ச்” வெளிச்சத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மின் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, தற்சார்பு மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, “ஃபியூஸ் கட்டையைக் காணவில்லை, காற்றடிக்கவில்லை, கருப்பு ஆடுகள் சுற்றுகின்றன, பஞ்சாபைப் பார், பாண்டிச்சேரியைப் பார்” என கம்பிக் கட்டும் கதைகளை அளந்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள் தவெக அமைச்சர்கள். இப்படிப்பட்டவர்களை அமைச்சர்களாக கொண்ட தற்போதைய அரசு இயந்திரம், கூடிய விரைவில் முட்டுச் சந்தில் சென்று முட்டி நிற்கப் போகிறது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




