அமமுகவுடன் தேமுதிக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நாளை கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, அதிமுக தரப்பில் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் தரப்படுவதாக சொல்லப்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிகவுடன் பேசிவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். எனினும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு அமமுக நிர்வாகிகள் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா தொலைபேசி வாயிலாக டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக அமமுக உடன் நாளை கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.







