பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு- தமிழக அரசு

பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன் முழு கரும்பு,…

பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன் முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி நிதி ஒதுக்கியும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதனை உன்னிப்பாக கவனித்து, அனைத்து மக்களுக்கும் பொங்கல் தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

பச்சரிசி, முழுக்கரும்பு ஆகியவை தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும், தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திருப்பி அனுப்பக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், அமைச்சர் பெரியகருப்பன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு முறையாக பொங்கல் தொகுப்பு சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும், பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.