அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கையொப்பமிட்ட, அதிமுக புதிய உறுப்பினர் அட்டை விநியோகிக்கும் பணி தொடங்கியது.
கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமானது. அதேபோல், ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லுபடியாகியுள்ளது.
இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் கடந்த 9-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும், 10-ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை புறநகரில் நடைபெற்ற அதிமுக உறுப்பினருக்கான புதிய அடையாள அட்டை விநியோகிக்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த அட்டைகளில் மாற்றம் செய்து, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கையெழுத்திட்டுள்ள புதிய உறுப்பினர் அட்டைகள் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா









