2015 முதல் தமிழ்நாடு சந்தித்த பேரிடர்கள் – மாநில அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்…!

பேரிடர் காலங்களின் போது மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த டிசம்பர் 4-ம் தேதி சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால்…

பேரிடர் காலங்களின் போது மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த டிசம்பர் 4-ம் தேதி சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் உண்டான கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதையடுத்து நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு தரப்பில் சுமார் ரூ.12,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.  வட மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்த நிலையில்,  மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.450 கோடி அறிவித்தது. இதனிடையே மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரும் நிதியின் அளவு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில்,  மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக,  ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது.  எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை மத்திய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது.

இதன்படி,  தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.1,200 கோடி ஆகும்.  இதில் 75 விழுக்காட்டை,  அதாவது ரூ.900 கோடியை மத்திய அரசு தர வேண்டும்.  25 விழுக்காட்டை,  அதாவது ரூ.300 கோடியை தமிழ்நாடு அரசு ஏற்றிட வேண்டும்.  மத்திய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது.  அதாவது இரண்டு தடவை தலா ரூ.450 கோடி நமக்கு அளிக்கப்படும்.

ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால்,  அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும். சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும்,  தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும்,  இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-இல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று தான் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.  இதைத் தான் நானும் பிரதமரை நேரில் சந்தித்த போதும் வலியுறுத்தி குறிப்பிட்டு இருக்கிறேன். மனுவாகவும் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை.  NDRF-இல் இருந்து இதுவரை நமக்குக் கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.  மத்திய அரசிடமிருந்து நமக்கு வந்த ரூ.450 கோடி ரூபாய் நிதி என்பது, இந்த ஆண்டு நமது SDRF-க்கு,  மத்திய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணைதானே தவிர கூடுதல் நிதி அல்ல.

சவாலான நிதிநிலைச் சூழல் இருக்கும் போதிலும் மத்திய அரசு இந்தக் கூடுதல் நிதி தராத போதிலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியைச் செலவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.  சென்னையில் நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் ரூ.1,500 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களுக்கு அறிவித்துள்ள நிவாரண உதவிகளுக்கும் பணிகளுக்கும் ரூ.500 கோடிக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது மட்டுமின்றி சேதமடைந்துள்ள சாலைகள்,  பாலங்கள்,  குடிநீர்த் திட்டங்கள்,  மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை மறுசீரமைப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும்.

எனவே,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதே நேரத்தில் இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பாக சாலைகள் மருத்துவமனைகள் பாலங்கள்,  மின்கட்டமைப்புகள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிக்காக தமிழ்நாடு அரசு உடனடி முன்பணமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.250 கோடியை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன்.  அதோடு மேலும் தாமதமின்றி இந்த இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து மத்திய அரசு NDRF-இல் இருந்து கோரப்படுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே, 2015 முதல் 2021 வரை பேரிடர் காலங்களில் மத்திய அரசிடம் கோரப்பட்ட மற்றும் மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட தொகையின் விவரம் வெளியாகியுள்ளது.

  • 2015-16ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு நிவாரணமாக மத்திய அரசிடம், தமிழ்நாடு அரசு ரூ. 25,912 கோடி கோரியது.  அப்போது மத்திய அரசு ரூ.1,738 கோடி மட்டுமே நிவாரணமாக வழங்கியது.
  • 2016-17ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்கு நிவாரணமாக ரூ.39,565 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டது.  ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.1,748 கோடியை நிவாரண தொகையாக விடுவித்தது.
  • அதேபோல்,  வர்தா புயலுக்கு பின்னர் நிவாரணமாக மத்திய அரசிடம், தமிழ்நாடு அரசு ரூ.22,573 கோடி கோரியது.  மத்திய அரசு ரூ.266 கோடி மட்டுமே அப்போது விடுவித்தது.
  • 2017-18ம் ஆண்டு வந்த ஒக்கி புயலுக்கு நிவாரணமாக ரூ.9,302 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டது.  ஆனால், ரூ.133 கோடி மட்டுமே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிவாரணமாக அறிவித்தது.
  • அதையடுத்து வந்த கஜா மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்கு நிவாரணமாக முறையே ரூ.17,899 கோடி,  ரூ.3,758 கோடியை மத்திய அரசிடம், தமிழ்நாடு அரசு கோரியது. அப்போது கஜா புயலுக்கு நிவாரணமாக ரூ.1,146 கோடியும்,  நிவர் புயலுக்கு நிவாரணமாக ரூ.63.14 கோடியும் மத்திய அரசு விடுவித்தது.
  • 2015 ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் ரூ.1,27,655.80 கோடி கோரியுள்ளது.  இதில் ரூ.5,884.49 கோடி மட்டுமே மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.  இது தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிய தொகையில் 4.61% மட்டுமே.

2023 – 24ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு ரூ.900 கோடியும்,  மாநில அரசு ரூ.300 கோடியும் என ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  அதில் நிவாரண நிதியாக ரூ.450 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது.

குஜராத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக மொத்தம் ரூ.1,556 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில்,  ரூ.1,140 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் மகாராஷ்டிராவுக்கு ரூ.3,788 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,  ரூ.1,420 கோடியும்,  உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.2273 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில்,  ரூ.812 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.