மாற்றுத்திறனாளி பெண் கொலை – திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த ஜோடி கைது!

மதுரையில் கை, கால்கள் கட்டப்பட்டு மாற்றுத்திறனாளி பெண்  கொலை செய்யப்பட்ட வழக்கில்,  நகை, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் பார்வை மாற்றுத்திறனாளியான கவிதா (50).  இவர்…

மதுரையில் கை, கால்கள் கட்டப்பட்டு மாற்றுத்திறனாளி பெண்  கொலை செய்யப்பட்ட வழக்கில்,  நகை, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் பார்வை மாற்றுத்திறனாளியான
கவிதா (50).  இவர் டேனியல் ஆறுமுகம் என்ற பார்வை மாற்றுத்திறனாளியான அரசு
பள்ளி இசை ஆசிரியரை காதலித்து திருமணம் முடித்தார்.  இவர்களுக்கு நான்சி
என்ற மகளும் உள்ளார்.  மாற்றுத்திறனாளி கவிதா தனது கணவர் மற்றும் மகளுடன்
மதுரை சக்கிமங்கலம் அருகே அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனி பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக கவிதாவின் கணவர் டேனியல் வீட்டில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதனையடுத்து கவிதாவின் மகள் நான்சி உசிலம்பட்டி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார், அவர் அதே பள்ளியில் விடுதியில் தங்கி வருவதால் கவிதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.  பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணான கவிதா அருகில் உள்ளவர்களின் உதவியோடு தனது சொந்த வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த கவிதா கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணியால் பொத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.  மேலும் கவிதாவின் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பெயரில்,  சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இறந்த பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் கவிதாவின் எதிர் வீட்டில் வசித்து வந்த 24 வயது சிவானந்தம் என்ற இளைஞர் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில்,  சிவானந்தம் அளித்த வாக்கு மூலம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.  சிவானந்தம் அளித்த வாக்குமூலத்தில், அவருக்கும், கவிதாவின் வீட்டின் அருகே வசித்து வரும் கலையரசி 30 என்ற திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பல நாட்களாக உறவில் இருந்து வந்துள்ளனர்.  இந்நிலையில்கவிதா வீட்டில் அதிகளவு நகை,  பணம் வைத்திருப்பதை அறிந்து கொண்ட இருவரும் அதை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இதனையடுத்து திங்கட்கிழமை நள்ளிரவில் கவிதா வீட்டுக்குள் இருவரும் சென்று கவிதாவின் கை, கால்களை கட்டி போட்டு விட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது கவிதா கூச்சலிட்டதால் அவரது சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க வாயில் துணியை திணித்ததாகவும்,  அவர்கள் கொண்டு வந்த துணியால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு வீட்டின் பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் கலையரசியையும் கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பார்வை மாற்றுத் திறனாளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தையை இழந்த சில ஆண்டுகளில்,  தாயையும் இழந்து தவிக்கும் 17 வயது மகளின் நிலை அப்பகுதியில் இருப்பவர்களிடம் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கொலை சம்பவம் நடந்த 36 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த சிலைமான் காவல் நிலைய போலீசாரை மாவட்ட எஸ்பி அரவிந்தன் பாராட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.