தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. 16 வயதினிலே, முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார்.
மேலும் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களையும் பாரதிராஜா இயக்கியுள்ளர். பாரதிராஜாவின் ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென காலமானார். இது ஒட்டு மொத்த திரையுலகையே அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் பாரதிராஜா, கடந்த மாதம் 27ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் பாரதிராஜாவின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,”பாரதிராஜா அவர்கள் கடுமையான நுரையீரல் தொற்று காரணாமா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு பொருத்தமான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவால் அவர் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.







