திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ளது பிரபல சுற்றுலாத் தலமான மலைகளின் இளவரசி கொடைக்கானல். இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பிரபல விடுதிகளில் தங்குகின்றனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏராளமான உணவகங்கள் உள்ளன. ஆனால் இங்குள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் பரிமாறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பல்வேறு உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து அழித்த அதிகாரிகள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். தரமான உணவுகளை மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.
வேந்தன்







