44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜெர்மன் தொழில் நுட்பத்தில்
தயாரிக்கப்பட்ட 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 187 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இங்கு 22 ஆயிரம் சதுரஅடியில் ஒரு அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் 2-வது அரங்கம் என இரண்டு அரங்கத்தில் செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அரங்கம் (ஹால்) 1-ல் 196 டேபில் போடப்பட்டு அதில் 49 அணிகள் பங்கேற்க உள்ளன. அரங்கம்(ஹால்) இரண்டில் 512 டேபில் போடப்பட்டு 49 அணிகள் அதில் பங்கேற்க உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்காக தற்போது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் சர்வதேச ஒலிம்பியாட் போட்டி குழுவினர் ஜெர்மன் நாட்டில் இருந்து வரவழைத்துள்ளனர். இதில் முதல் கட்டமாக தயாராகி வரும் 512 டேபில் போடப்பட்டுள்ள 2-வது அரங்கத்தில் டிஜிட்டல் செஸ்போர்டுகள் இன்று டேபில் வாரியாக கணினியுடன் இணைக்கும் கேபிளுடன் இணைக்கப்பட்டன.
அதேபோல் டேபிள் வாரியாக அமைக்கப்பட்ட டிஜிட்டல் செஸ் போர்டில் ஸ்டிக்கர் டைப்பில் வரிசை எண்கள் பொருத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் அனைத்து செஸ் போர்டுகளையும் கணினி மூலம் இணைக்கும் வசதிகளும் மென்பொருள் பணியாளர்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு டேபிளிலும் வரிசை எண்களுடன் அமைக்கப்பட்ட செஸ் போர்டு விவரங்கள், ஒவ்வொரு டேபிலிலும் எந்த நாட்டு வீரர்கள் அமருகின்றனர். அவர்களுக்கான டிஜிட்டல் செஸ் போர்டுகள் எவை என்பது குறித்து சரிபார்க்கப்பட்டு, அவைகள் அந்தந்த டேபிலில் கேபிள் மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன.
வருகிற 24-ந்தேதி பயிற்சி விளையாட்டு நடத்தி செஸ் போர்டுகள் சரியாக இயங்குகின்றதா என பரிசோதிக்கப்பட உள்ளதாகவும் செஸ் போர்டு பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மென்பொருள் பணியாளர்கள் சிலர் தெரிவித்தனர். அதேபோல் இப்போட்டியில் எந்தந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த நாடுகளின் தேசிய கொடிகள் அரங்கத்தின் சுவர்களில் வரிசை கிரகமாக ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்பட்டுள்ளது.