தான் யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை என்று மகாராஷ்ட்ர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசினார்.
அப்போது, சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசில், தங்கள் எதிர்காலம் குறித்த கேள்வி சிவ சேனா எம்எல்ஏக்களுக்கு இருந்ததாகக் குறிப்பிட்டார். எனவே, அந்த கூட்டணி வேண்டாம் என சிவ சேனா தலைமையிடம் 5 முறை முறையிட்டதாகத் தெரிவித்த ஷிண்டே, எனினும், தனது கருத்தை உத்தவ் தாக்கரே ஏற்கவில்லை என கூறினார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத நிலையில்தான், கிளர்ச்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இது அநீதிக்கு எதிரான கிளர்ச்சி என அவர் கூறினார்.
தான் யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை என்றும், எந்த ஒரு எம்எல்ஏ-வையும் தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடக்கத்தில் சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தபோது, முதலமைச்சராக தான் அறிவிக்கப்பட்டதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால், உத்தவ் தாக்கரே முதலமைச்சரானதாகவும் தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, அதனை தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் பதவி தனக்கு முக்கியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசை புகழ்ந்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, கடந்த காலத்தில் அவர் தன்னை அமைச்சராக்கியவர் என குறிப்பிட்டார். 2019ல் துணை முதலமைச்சர் பதவியை சிவ சேனாவுக்கு வழங்கவும் அவர் முன்வந்தார் என்றும் ஷிண்டே குறிப்பிட்டார்.
பாஜகவுடனான கூட்டணிதான் சிவ சேனாவுக்கு பொருத்தமானது என தெரிவித்த ஷிண்டே, தங்கள் கூட்டணி மகாராஷ்ட்ரத்தில் ஹிந்துத்துவத்தை வளர்க்கும் பணியில் இனி தீவிரம் காட்டும் என்றார்.
தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என்றும் அவர் தெரிவித்தார்.










