ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியா? நடிகர் விஷால் விளக்கம்

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்பியது என்றே தெரியவில்லை என்று…

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்பியது என்றே தெரியவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் உதவி இயக்குநராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் செல்லமே படம் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். திமிரு, சண்டக்கோழி, கதகளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வீரமே வாகை சூடும் படம் தான் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படமாகும்.

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலும் தற்போது உள்ளார்.

படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஷால் ஆந்திர மாநிலத்தில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும், அவரிடம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆந்திர மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

அந்தத் தகவலை விஷால் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நான் ஆந்திரப் பிரதேச அரசியலில் இறங்கப் போவதாகவும் குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நான் இதை முற்றிலும் மறுக்கிறேன். இதைப் பற்றி எதுவுமே எனக்கு தெரியாது. இதைப் பற்றி யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இந்தச் செய்தி எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. ஆந்திரப் பிரதேச அரசியலில் நுழைவதோ அல்லது சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடும் எண்ணமோ எனக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தால் அதிகாரிகள் வேட்புமனுவை நிராகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.