லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தில் கமலின் இன்றோவே இந்த பாடலைக்கொண்டு தான் ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பாடலின் ஆடியோ வெர்ஷனில் அட்டகாசமான பீட்டோடு சென்னை ஸ்லாங்கில் ஜாலியாக தொடங்கி பிறகு அப்படியே வண்டி அரசியல் பக்கம் திரும்பும் . கமல்ஹாசன் தான் இப்பாடலை எழுதி பாடியுள்ளார் எனும் போது அரசியல் நெடி இல்லாமல் இருக்குமா?. இருப்பினும் ‘டோஸ் கொஞ்சம் அதிகமா இருக்கே’ எனவும் இணையவாசிகள் கூறிவந்தனர். அதிலும் குறிப்பாக..
கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே!
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே..
ஒன்னியும் இல்ல இப்பலே!
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே!
என்ற பாடல் வரிகள் சர்ச்சைக்கு வித்திடும் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியிருந்தது. மத்திய அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுவரும் நிலையில், பாடலில் இடம்பெற்றிருக்கும் ‘ஒன்றியம்’ எனும் வார்த்தையை அதனுடன் தொடர்பு படுத்தி இணையத்தில் வைரலாக்கினர்.இதுதொடர்பாக பேசிய பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “கமல்ஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரை நான் மிகவும் பரிதாபத்துடன் பார்க்கிறேன். ஒரு சிறந்த நடிகராக இருந்து அரசியல் கட்சியை ஆரம்பித்து எல்லாவற்றிலும் தோற்று போனவர் கமல் . டிவி நிகழ்ச்சியிலும் தோற்றுபோய் தற்போது செல்லாக்காசு ஆகிவிட்டார். யாரை சொன்னால் மக்கள் இவரை திரும்பி பார்ப்பார்கள் என்பதை யோசித்து பிரதமர் மோடியை பற்றி பேசுகிறார்.” என காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தில் அந்த வரிகளைக்கொண்ட பாடல் காட்சிகள் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் அந்த காட்சிகள் இடம்பெறவில்லை. இப்பாடல் முழுவதும் படமாக்கப்பட்டிருக்கும் எனவும், சர்ச்சையை தவிர்ப்பதற்காக அதை வெட்டியெடுத்திருக்கலாம் எனவும் விரைவில் பாடலின் முழு காட்சிகளும் யூ-டியூப்பில் வெளியிடப்படலாம் எனவும் சினிமா ஆர்வலர்கள் கூறிவந்தனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள வீடியோ பாடலிலும் அந்த 50 நொடி காட்சிகள் இல்லாமல் இருந்தது. ஏற்கனவே ஆடியோ பாடலுக்கு பரிச்சயமாகியிருந்தவர்கள் சரியாக 1:54வது நொடியின் போது ‘கஜானாலே காசில்லே’ என்று முனுமுனுத்தபடியே வீடியோ பாடலை கேட்க கமலோ, ‘டேய் அத வுட்டு ஒழி டா டேய்..ஒரு குத்து வுடுடா டேய்’ என பாடத்தொடங்கினார். ஆக அதற்கு இடைப்பட்ட ‘ஒன்றிய’ வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்த இணையவாசிகளில் சிலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.







