மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 10 நாட்களாக அரங்கேறிய காட்சிகள் அங்கு ஆட்சி மாற்றம் உறுதி என்பதை படிப்படியாக உறுதிசெய்தன. ஆனால் கிளைமாக்சில் இப்படி ஒரு திடீர் திருப்பம் இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் வார்த்தைகளில் சொல்வதென்றால் தான் முதலமைச்சர் ஆவோம் என ஏக்நாத் ஷிண்டேவே எதிர்பார்த்திருக்க மாட்டார். அவருக்கு கீழ் துணை முதலமைச்சராக இருப்போம் என தேவேந்திர பட்நாவிசும் நினைத்துபார்த்திருக்க மாட்டார்.
106 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜக, 44 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிவசேனாவின் அதிருப்தி பிரிவிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவின் அதிகபட்ச இலக்கு துணை முதலமைச்சராவதாகத்தான் இருக்கும் என்றுதான் வியாழக்கிழமை காலைவரை தகவல்கள் வெளியாகின. ஆனால் மகாராஷ்டிராவின் 20வது முதலமைச்சர் ஷிண்டேதான் என்பது அன்று ஆளுநரை சந்தித்த பிறகு, மகாராஷ்டிரா பாஜக தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவிக்கும்போதுதான் பிறருக்கே தெரியவந்தது. தான் ஆட்சியில் பங்கேற்கப்போதில்லை வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்போகிறேன் என பட்நாவிஸ் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தபோது, அவர் அதிருப்தியில் இருப்பதாக யூகிக்க முடிந்தது. ஆனால் அன்று மாலையே துணை முதலமைச்சராக பதவி ஏற்றார் தேவேந்திர பட்நாவிஸ். டெல்லியிலிருந்தோ நாக்பூரிலிருந்து உத்தரவு வந்துவிட்டால் பாஜகவில் எல்லாம் சாத்தியமே என சரத்பவார் இது குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மகாராஷ்டிராவில் இப்படி ஒரு திடீர் திருப்பத்தை பாஜக தலைமை அரங்கேற்றியதற்கான காரணம் என்ன அல்லது இந்த அதிரடி முடிவால் பாஜகவிற்கு கிடைக்கப்போகும் பலன்கள் என்ன என்று யூகிக்க முடிந்த காரணங்கள் இவை.
1) கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் முதலமைச்சர் பதவிகேட்டு சிவசேனா அழுத்தம் கொடுத்தபோது, தேசியவாத காங்கிரசிலிருந்து பிரிந்து வந்த அஜித் பவார் ஆதரவை அவசர அவசரமாக பெற்றுக்கொண்டு ஆட்சி அமைத்தது பாஜக. காலை 7.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புவிழாவில் முதலமைச்சராக பதவியேற்றார் தேவேந்திர பட்நாவிஸ். ஆனால் மூன்றே நாட்களில் ஆட்சியை இழந்தது பாஜக, அப்போது முதலமைச்சர் பதவிக்கும், அதிகாரத்திற்கும் ஆசைப்பட்டு அவசரகதியில் நடந்து கொண்டதாக பாஜக மீது விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த முறை முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து அதிகாரத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டதல்ல பாஜக என அக்கட்சி சுட்டிக்காட்டியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பீகாரில் ஐக்கிய ஜனதா தள கூட்டணயில் இருந்துகொண்டே அக்கட்சியின் வீழ்ச்சிக்கு வித்திடுவதாக விமர்சனம் எழுந்தபோதும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்து அந்த விமர்சனங்களுக்கு இதே பாணியில்தான் பதிலடி கொடுத்தது பாஜக.
2) மகாராஷ்டிராவில் அரசியலில் நிலவும் வாரிசு அரசியலை எதிர்த்து மக்களை கவர நினைக்கும் பாஜக, எந்த அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாத எளிய மனிதர்களையும் முதலமைச்சர் அந்தஸ்திற்கு தங்கள் கட்சி உயர்த்தும் என்பதை ஏக்நாத் ஷிண்டே மூலம் நிரூபிக்க நினைத்தது
3) இந்துத்துவா அரசியலுக்கு மகாராஷ்டிராவில் எப்போதும் தனி இடம் உண்டு. அம்மாநிலத்தில் இந்துத்துவா அரசியலின் பலன்களை பாஜகவும், சிவசேனாவும் பகிர்ந்துகொண்டு வருகின்றன. இந்நிலையில் தீவிர இந்துத்துவா கொள்கையுடையவரான ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவிலிருந்து தங்கள் பக்கம் ஈர்ப்பதன் மூலம் முழு பலனையும் அடைய பாஜக திட்டமிட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
4) சிவசேனாவிலிருந்து வெளியே வந்துள்ள ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியின் எதிர்ப்புகளை சமாளிக்கவும், உண்மையான சிவசேனா தங்களது பிரிவுதான் என நிரூபிப்பதற்கும் முதலமைச்சர் பதவியில் அவர் இருப்பதுதான் சிறந்தது என பாஜக எண்ணியிருக்கலாம்.
5) “நான் முதலமைச்சர் பதவி விலகுகிறேன். ஆனால் சிவ சைனிக் ஒருவரால் முதலமைச்சர் ஆக முடியுமா?” என சமீபத்தில் உத்தவ் தாக்ரே கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது சிவ சைனிக் ஒருவரை முதலமைச்சர் ஆக்கி உத்தவ் தாக்ரேவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டது பாஜக.
6) தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்போது உத்தவ் தாக்ரே பேசிய உருக்கமான பேச்சினால் மக்களிடையே ஏற்படும் அனுதாப அலையை ஈடுகட்டும் வகையிலும் முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவிற்கு பாஜக விட்டுக்கொடுத்துள்ளதாக யூகிக்கப்படுகிறது.
7) கடந்த 2014- 2019ம் ஆண்டு காலகட்ட ஆட்சியின்போது மராத்தா மக்களின் போராட்டம் பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடியை கொடுத்தன. இந்நிலையில் மராத்தா இனத்தை சேர்ந்த ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டேவை முதலமைச்சராக்கி அவர்களின் ஆதரவை முழுமையாக பெற பாஜக வியூகம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
8) தற்றோது ஏக்நாத் ஷிண்டே பின்னால் 50 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர்களின் எண்ண ஓட்டங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்பிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சர் ஆக்கி அவரது தலைமையின் கீழ் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் எண்ணங்கள் ஊசலாடுவதை தவிர்க்க முடியயும் என பாஜக எண்ணியிருக்கலாம்.
9) 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கிய பாஜகவின் அரசியல் அசைவாகவும் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டது பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து களமிறங்கும்போது, உண்மையான சிவசேனா தங்கள் பக்கம்தான் என காட்டுவதற்காகவும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு இந்த அளவிற்கு பாஜக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
10) மகாராஷ்டிரா பாஜக தனிப்பட்ட ஒருவரை சார்ந்து இல்லை, தனிப்பட்ட ஒருவரை முன்னிலைப்படுத்தி பாஜக இயங்காது என்பதை உணர்த்தும் விதமாகவும் தேவேந்திர பட்நாவிஸ்க்கு இந்த முறை முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்ப்ரைசுக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து யூகங்களும் அனுமானங்களும் உலாவுகின்றன.