கோனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா என பெயர் மாற்றம் செய்யும் பரிசீலனைக்கு ஆந்திரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த மே மாதத்திற்கு முன்னர் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா பெயர் மாற்றம் செய்ய பரிசீலிக்கப்படுவதாக மே மாதம் அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து பல அமைப்புகள் கடுமையான போராட்டங்களை நடத்தின. இதனால் கலவரம் உருவானது. மட்டுமல்லாது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அனைவரின் கருத்தை ஏற்ற பின்னர் தற்போது இந்த பரிசீலனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பதற்றத்தை தவிர்க்கும் வகையில் இம்மாவட்டத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்ட அமலாபுரம் நகரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேட்டியளித்த அரசு ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி, நன்கு ஆராய்ந்து பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இன்று முதல் கோனசீமா மாவட்டத்தின் பெயர் அதிகாராப்பூர்வமாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா என மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறையில் அமைச்சர் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் வீடு ஆகியவை சேதப்படுத்தப்பட்டது. மேலும் பொது சொத்துக்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.








