தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நாளை மறுநாள் (அக். 6) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்டப் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய், தவெக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை நடத்திய நிலையில், நேற்று முன்தினம் மதுராந்தகத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது டீக்கடையில் டீ குடித்தும், டிராக்டர் ஓட்டியும் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், இன்று தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார்.
இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் தனி விமானத்தில் கோவை வந்தடைந்தார். பின்னர், கோவையில் இருந்து தாராபுரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். தொடர்ந்து, தாராபுரத்தில் வாகனத்தில் ரோடு ஷோ மேற்கொண்ட முதலமைச்சருக்கு வழியெங்கும் பொதுமக்கள் மலர்கள் தூவியும், பரிசுகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலை வலத்தின்போது பிரச்சார வாகனத்தில் இருந்து பேசிய முதலமைச்சர் விஜய், “தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் நான் அல்ல. என் சொந்தங்களை எப்ப வேணும்னாலும் பார்ப்பேன், எத்தனை முறை வேண்டும்னாலும் பார்ப்பேன். திமுகவுக்கும் மற்றும் பலருக்கும் ஓட்டு போட்டீங்கன்னா, பெண்களை அவதூறா பேசுகிறவங்களை ஆதரிக்கிற மாதிரினு சொன்னேன்; வெறும் ஓட்டுக்காக நான் அப்படி சொல்லவில்லை” என்று பேசினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சாலை வலம் சென்றார்.
ஜல்லிக்கட்டு காளைகளை ஓட்டியும், சிறிது தூரம் மாட்டுவண்டி ஓட்டியும் முதல்வர் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, முருங்கை விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வீதிகளில் இறங்கி நடைபயணமாகச் சென்று முதலமைச்சர் விஜய் வாக்கு சேகரித்தார்.
சுமார் மூன்றரை மணி நேரம் சாலை வலம் சென்ற விஜய், மாலை 4 மணி அளவில் ரோடு ஷோவை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.




