கேரளாவில் 2006-ஆம் ஆண்டு இந்தோ-மலேசிய கூட்டு நிறுவனமான PATI-BEL மேற்கொண்ட ஒரு பெரிய சாலைப் பணியின் அப்போதைய தலைமைத் திட்ட மேலாளராக இருந்த மலேசியப் பொறியாளர் லீ சீ பீன் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக் கடிதத்தில் அப்போதைய மாநில பொதுப்பணித் துறைச் செயலாளர் ஞானேஷ் குமார் (தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர்) பெயர் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. PATI-BEL மேற்கொண்ட சாலைப் பணிக்கான பணத்தைச் செலுத்துவதற்கு லஞ்சம் கோரியதாக மலேசிய நாட்டவர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஞானேஷ் குமார் பொதுப்பணித் துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு மத்திய அரசு பணிகளுக்குச் சென்றதால், இது தொடர்பான விசாரணை கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், 2006-ல் நடத்தப்பட்ட ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையானது வெளிப்புற நிர்ப்பந்தத்தின் காரணமாக சமரசம் செய்யப்பட்டதாகத் தனக்கு ஒரு புகார் வந்திருப்பதாக கேரள உள்துறை அமைச்சர் சென்னிதலா தெரிவித்து இருந்தார். “இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மலேசியப் பொறியாளரின் தற்கொலைக் குறிப்பில் ஞானேஷ் குமாரின் பெயர் இடம்பெற்றிருந்தது. பீன், தனது மனைவிக்கும் நிறுவன இயக்குநருக்கும் எழுதிய தற்கொலைக் குறிப்புகளில் குமாரின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.”
இந்த நிலையில், 2006-ஆம் ஆண்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாநில பொதுப்பணித் துறையின் (PWD) செயலாளராகப் பணியாற்றியபோது நடந்ததாகக் கூறப்படும் சாலைப் பணி தொடர்பான ஊழல் குறித்த ஊழல் தடுப்பு விசாரணையை மீண்டும் தொடங்குமாறு கேரள உள்துறை உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் ஞானேஷ் குமார் தனித்து செயல்பட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்புகளும், மும்பையில் கரப்பான் பூச்சி கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கேரள லஞ்ச ஒழிப்புத்துறை பழைய வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளதால் ஞானேஷ் குமாருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.




