தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் பாலபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.
தனுஷ் நடித்துள்ள திரில்லர் திரைப்படமான ’நானே வருவேன்’, அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். அதிரடி – திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இந்துஜா, பிரபு, யோகி பாபு, செல்வராகவன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுஷ் – செல்வராகவன் இணைவதால் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிபார்ப்பு எழுந்துள்ளது. கூடுதலாக இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாலும், செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாலும் ரசிகர்களின் ஆவல் எல்லையைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, கண்டு கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்திற்குத் தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது. இந்நிலையில் நானே வருவேன் திரைப்படம் இன்று வெளியானது. சென்னை ரோகிணி தியேட்டரில், தனுஷின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி, பட்டாசு வெடித்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பேண்ட் வாத்தியங்களுடன் நானே வருவேன் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி ஆரவாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதனோடு நானே வருவேன் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.









