கர்ணன் படத்தில் “பண்டாரத்தி” பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தின் பண்டாரத்தி பாடல் கடந்த 2ம் தேதி வெளியாகியது. இந்த பாடல் குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பாடலை நீக்க வேண்டும் என்றும் பாடலை நீக்கும் வரை இத்திரைப்படத்திற்கு இடைக்காலத்தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விருதுநகர் பகுதியை சேர்ந்த ராஜா பிரபு பொதுநல வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. நடிகர் தனுஷ், பாடலாசிரியர் யுகபாரதி, பாடலைப் பாடிய தேவா, கர்ணன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தணிக்கைத்துறை மண்டல அலுவலர், ஆகியோரை இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். மேலும் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.







