கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறை அனுமதி வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு மனு அளிக்கப்பட்டால், 7 நாட்களுக்குள் காவல்துறையினர் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி விழாக்குழுவினர் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள டிஜிபி, ஆபாச காட்சிகள் மற்றும் நடனம் எதுவும் இல்லை என்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆடல், பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பெண் கலைஞர்களின் கண்ணியத்திற்கும், மாண்பிற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் ஆபாச ஆடையில் சித்தரிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ள டிஜிபி, இரட்டை அர்த்தப் பாடல்கள் கலை நிகழ்ச்சியில் இடம்பெறக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள் : ”எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே இருக்கிங்க” -மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ’கீர்த்தி சுரேஷ்’ ஓப்பன் டாக்!…
ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் எதுவும் விநியோகிக்கப்படக்கூடாது என்றும், நிபந்தனைகள் ஏதேனும் மீறப்பட்டால், நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.







