அதிமுகவில் மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வரும் இடங்களில் எல்லாம் பொதுச் செயலாளர் என்று மாற்றம் செய்யப்படுகிறது. துணை ஒருங்கிணைப்பாளர் வரும் இடங்களில் எல்லாம் துணைப் பொதுச் செயலாளர் என்று மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேர்ந்தபோது, துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்கி தினகரனை அதற்கு நியமித்தார். எனினும், சில மாதங்களில் அதிமுகவின் அப்போதைய அமைச்சர்கள் ஒன்றுகூடி தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கினர். அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்ததால் பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், 2 துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பு உருவாக்கப்பட்டது. துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் செயல்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கு பதில் மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பே உருவாக்கப்பட்டுள்ளது. துணை ஒருங்கிணைப்பாளராக இருந்து தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பக்க பலமாக செயல்பட்ட கே.பி.முனுசாமி, அதிமுகவின் குரலாக ஊடகங்களில் தொடர்ந்து பேசி வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரில் ஒருவர் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியை, அவருக்கு முன்பே பொருளாளர் பதவி வகித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு அளித்துள்ளார் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.







