வந்தவாசி கால்நடை மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்டோர்,மாடு கோழிகளை வைத்து மனு கொடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கால்நடை மருத்துவமனையில், உரிய கால்நடை மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், கால்நடைக்கு ஊசி போடும் தகுந்த பயிற்றுனர்கள் மற்றும் மருந்துகள் என எந்த வசதிகளும் கடந்த ஆறு மாத காலமாக இல்லை. இதனால், கால்நடைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளவதாகக் கூஏஇ கோழி மற்றும் மாடுகளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அழைத்துச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு கொடுத்தனர்.
மாடுகளுக்குக் கோமாரி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி பாதிக்கப்படுவதாகவும், கால்நடை மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால் கால்நடைகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாடுகள் மற்றும் கோழிகளை கொண்டு வந்து ஊர்வலமாக சென்று வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தி, நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கால்நடை மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வட்டாட்சியர் ராஜேந்திரனிடம் அளித்தனர்.
–சௌம்யா.மோ







