இயக்குனர் பாக்யராஜ் மறைவு – பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!

இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (27.06.2026] காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்த் திரையுலகின் பொக்கிஷமாகத் திகழ்ந்த பாக்யராஜ் அவர்கள், திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எனப் பல்வேறு துறைகளில் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர்.

அவர் இயக்கிய மற்றும் நடித்த தூறல் நின்னு போச்சு, சின்ன வீடு, முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள் போன்ற திரைப்படங்கள் மக்கன் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, 100 வெள்ளி விழா திரைப்படங்களாக அமைந்துள்ளன. பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் கேப்டன் அவர்கள் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பாக்யராஜ் அவர்களின் குடும்பமும், எங்கள் குடும்பமும் நீண்டகாலமாக நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறோம். கேப்டன் அவர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர் பாக்யராஜ் அவர்கள்.

அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகும் உயர்ந்த பண்பாளர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மனைவி பூர்ணிமா, மகள் சரண்யா, மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும், அவரை இழந்து வாடும் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.