“டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர்வார வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் முன்பே, அதாவது ஜூன் மாதம் 12-ஆம் தேதிக்கு முன்பே டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், வடிகால் வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகள் அனைத்தும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் தங்கு தடையில்லாமல் சென்றது.

மேலும், மழைக் காலங்களில் நீர் நிலைகளில் தடுப்பின்றி வெள்ள நீர் வேகமாக வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ‘நெய்வேலி காட்டாமணக்கு’ என்ற செடி நீர் நிலைகள் முழுவதும் ஆக்கிரமித்து பாசனத்திற்கு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து முழுமையாக அகற்றி, இன்றுவரை நெய்வேலி காட்டாமணக்கு என்ற செடி டெல்டா மாவட்டங்களில் எங்கும் இல்லை என்ற நிலையை உருவாக்கியது அம்மாவின் அரசு.

டெல்டா மாவட்டங்களில் எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சிக் காலத்தில் தூர் வாரும் பணியையும், ஆறுகளின் கட்டமைப்புப் பணிகளையும், அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவு பெற்ற விவசாய சங்கங்களுக்கே வழங்கி, விவசாயிகளே தூர் வாரும் பணியை மேற்கொண்டதால், இப்பணி 100 சதவீதம் முறையாக நடைபெற்றது. இவ்வாறு, அம்மாவின் அரசு, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் முறையாக தூர் வாரும் பணியை காலத்தே மேற்கொண்டதால், ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை சென்றதால், விவசாயிகளுக்கு எவ்வித சேதமுமின்றி விளைச்சல் பெருகி, அம்மா ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதினை 6 முறை பெற்றோம். கடந்த ஆட்சிக் காலத்தில் டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரப்படவில்லை என்று சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும், நானும், எங்களது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் பலமுறை பேசியும் எந்தப் பயனும் இல்லை.

இந்த ஆண்டும் (2026) தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, டெல்டா மாவட்டங்களில் ‘சி’ மற்றும் ‘டி’ வாய்க்கால்கள் அவசர கோலத்தில் தூர் வாரப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் முழுமையாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் சென்றடையாமல் விவசாயப் பணிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்படாததால் மழை வெள்ள நீர் வடியாமல் விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். மேலும், கொள்ளிடம் ஆறு, கோரையாறு, வெண்ணாறு போன்ற ஆறுகளில் இருந்து கிளை ஆறுகள் பிரியும் தலைப்புகளில் ஆகாயத் தாமரையை தடுத்து நிறுத்தும் வகையில் தடுப்புகளை அமைத்து நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, டெல்டா மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளிலும் தேங்கிக் கிடக்கும் ஆகாயத் தாமரையை அகற்றி, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்திட வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.