ஹாங்காங்கில் இருந்து பப்புவா நியூ கினியா நோக்கி 146 பேருடன் சென்ற ஏர் நியூஜினி (Air Niugini) விமானம், எஞ்சினில் தீப்பற்றியிருக்கலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, நவம்பர் 21 – சனிக்கிழமை அதிகாலை பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள டாவோ சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
போயிங் 767-383ER ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 9 பணியாளர்கள் இருந்தனர். விமானம் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டு டாவோ விமான நிலையத்தில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அவசரகால வெளியேற்றச் சறுக்குகள் (Emergency Slides) வழியாக அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

எஞ்சினில் தீப்பொறி ஏற்பட்டதாக எச்சரிக்கை!
விமானத்தின் வலதுபுற எஞ்சினில் தீப்பொறிகள் அல்லது தீ ஏற்பட்டிருக்கலாம் என்பதை எச்சரிக்கை குறியீடு மூலம் விமானிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிய விமானிகள், நள்ளிரவுக்குச் சிறிது நேரத்துக்குப் பிறகு டாவோ விமான நிலையத்தில் திட்டமிடப்படாத அவசரத் தரையிறக்கத்துக்கு அனுமதி கோரியுள்ளனர். இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எரிக் அபோலோனியோ கூறுகையில், விமானிகள் அளிக்கும் தகவல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!
விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமான நிலைய முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளும் ஹோட்டல் தங்குமிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. விமானத்தில் சேதம் ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவசரகால மீட்புப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் டாவோ விமான நிலையம் மற்ற விமானங்களின் போக்குவரத்துக்குத் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு வரவிருந்த இரண்டு உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர், பிரதான ஓடுபாதையில் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.




