முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

டெல்லி மூச்சுத் திணற காரணம் என்ன? வைக்கோல் எரிப்பா? தீபாவளி பட்டாசா?


ஜெயகார்த்தி

கட்டுரையாளர்

தலைநகர் டெல்லியில் காற்று மாசு உச்சத்தைத் தொட்டுள்ளது. மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் டெல்லி காற்று மாசுக்கான காரணம் என்ன? அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்ன? தீர்வு என்ன என்பது பற்றி இனி பார்ப்போம்…

அபாய சங்கு ஊதிய அரசு

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு கடந்த வியாழக்கிழமை அன்று 426 என்ற மோசமான நிலையை எட்டியது. இதையடுத்து, அரசு ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே பணி செய்யலாம் என்றும் டெல்லி மாநில அரசு உத்தரவிட்டது. அதற்கு முன்பு தொடக்கப் பள்ளிகள் அனைத்தையும் மூடுமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துவிட்டார். தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அனைத்து கட்டுமானப்பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மூச்சுப் பிரச்னை உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டீசலில் இயங்கும் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காற்று மாசைத் தடுக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் புகை மாசை அகற்றும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காற்று மாசுக்கு காரணம் என்ன?

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மட்டும் ஆண்டு தோறும் சுமார் 3 கோடி டன் வைக்கோல் உற்பத்தி ஆகிறது. அதில் 65 லட்சம் டன் வைக்கோல் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. விவசாயிகளும் நெல் அறுவடை முடிந்த பிறகு, அடுத்த சாகுபடியை உடனே தொடங்க முனைகின்றனர். இதற்காக வயல்களில் குவிந்துள்ள வைக்கோல்களை எரித்து விடுகின்றனர். இதன் காரணமாக எழும் புகையால் காற்று மாசு உச்சத்தைத் தொடுகிறது.


வைக்கோல் எரிப்பின் காரணமாக என்சிஆரில் காற்றுமாசு அதிகரிக்கிறது. தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் புதன் , வியாழன் அன்று நேரிட்ட சுமார் 35 விழுக்காடு காற்று மாசுக்கு வைக்கோல் எரிப்பு தான முக்கிய காரணம் என்று சாபர் (SAFAR) இந்தியா தெரிவித்துள்ளது. வைக்கோல் போர் எரிப்பு மட்டுமின்றி, கட்டுமானப் பணிகள், கட்டுமான இடிப்புப் பணிகள், அதற்குப் பயன்படுத்தும் தரமற்ற பொருட்கள், வாகனப் போக்குவரத்தும் காற்று மாசுக்கு காரணமாகி விடுகிறது.

தீபாவளி பட்டாசால் மாசா?

முக்கிய காரணமான வைக்கோல் எரிப்பு பற்றி பஞ்சாப், ஹரியானா, டெல்லி அரசுகள் கண்டுகொள்ளாமல் தீபாவளி பட்டாசால் தான் காற்று மாசு என்று கூறி பட்டாசுக்கு தடைவிதித்தன அரசுகள். ஒரு நாள் பட்டாசு வெடிப்பு, டெல்லி மாசுக்கு காரணமில்லை என்றும் உண்மைக் காரணத்தை சொல்லி தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதிய போதிலும், நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும் அதை அரசுகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கத் தடை போட்டுவிட்டன டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள். அதே நேரத்தில், அந்த மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்த போதிலும், காற்று மாசு ஆண்டுக்கு ஆண்டு குறையவில்லை. டெல்லி மாசுக்கான உண்மைக் காரணம் தெரிந்துவிட்டதால், தமிழகம் அரசும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பட்டாசு தடைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க முயற்சிக்கலாம்.

டெல்லியில் காற்று மாசுக்கு  காரணம் வைக்கோல் எரிப்பு தான் பிரதானமாக இருக்கிறது. 2019ஆம் ஆண்டு 55 ஆயிரம் இடங்களில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வைக்கோல் எரிக்கப்பட்டது. அதே 2020ம் ஆண்டு 76 ஆயிரமாக உயர்ந்து, 2021ஆம் ஆண்டு 71 ஆயிரம் இடங்களில் வைக்கோல் எரிக்கப்பட்டுள்ளது. வைக்கோல் எரிப்போடு, பருவநிலையும் காற்று மாசுக்கு துணைபோவதாக இருக்கிறது. பலத்த காற்று வீசினால் புகை விரைவாக வெளியேறி விடும் என்றும் அப்படி வீசாமல் இருப்பதால் காரணமாக புகை காற்றில் கலந்து சரியாவதற்கு கால தாமதம் ஆகிறது என்றும் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

கொரோனாவை மிஞ்சிய கூட்டம்

டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா காலத்தைவிட மிஞ்சிய நோயாளிகள் கூட்டம் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது. மூச்சுத் திணறல் சார்ந்த நோய்களுக்கு சிகிசை பெற மருத்துவமனை வாயில்களில் மக்கள் காத்திருக்கின்றனர். காற்று மாசு மோசமான நிலையை எட்டி விட்டதால்  ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மிகுந்த சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

வைக்கோல் எரிப்பை தடுக்க முடியாதது ஏன்?

இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய பிரச்னை பொருளாதாரம் தான். வைக்கோலை அகற்றுவதில் விவசாயிகள் சந்திக்கும் சிக்கல் காரணமாகவே, அவை வயலிலேயே அப்படியே எரியூட்டப்பட்டு விடுகின்றன. விவசாயத்தில் ஏற்கனவே பெரிய லாபம் கிடைக்காத நிலையில், வைக்கோலை அகற்றுவதில் கூடுதல் செலவை எதிர்கொள்ள முடியாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வைக்கோலை அப்படியே வயலில் எரிப்பது என்பது அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாததாக இருப்பதும், அவற்றை எரிப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

காற்று மாசு அரசியல்

காற்று மாசுக்கு பஞ்சாப் அரசின் செயலற்ற தன்மை தான் காரணம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். வைக்கோல் எரிப்பைத் தடுத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் டெல்லி மற்றும் பஞ்சாப் அரசுகள் மீது குற்றம் சாட்டுவது பலன் தராது மாற்று யோசனைகள் எதிர்காலத் திட்டங்கள் பற்றி யோசிக்க     லாம் என்றும்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

என்ன தான் செய்வது?

உலகின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது. தினசரி 80 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. ஆண்டுக்கு மாசினால் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிழந்து வருகின்றனர். இந்த சூழலில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். வைக்கோல் எரிப்பைத் தடுக்க விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கலாம். அதாவது வைக்கோலை, எரிக்காமல் பாதுகாப்பாக அகற்றுவதற்கு என்று மானியம் வழங்கலாம். அல்லது மாநில அரசே வைக்கோலை அகற்றும் பணியை மேற்கொள்ளலாம்.

மேலும் வைக்கோலைப் பயன்படுத்தி வேறு பொருள் தயாரிப்பது பற்றி ஆலோசிக்கலாம். மின்சார வாகனங்களை மட்டும் டெல்லியில் இயக்க அனுமதிக்கலாம். மாநில அரசும் எரிவாயுவில் இயங்கும் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்தலாம். டெல்லியில் கட்டுமானங்கள் மற்றும் கட்டுமானங்களை இடித்தல் பணிகளை முறைப்படுத்தலாம். வாகனப் போக்குவரத்தால் நேரிடும் மாசைக் குறைக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம்.

  • ஜெயகார்த்தி  
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு நிராகரிப்பு!

Web Editor

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

சிரஞ்சீவிக்கு தங்கையான கீர்த்தி சுரேஷ்

G SaravanaKumar