டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் ஒட்டுமொத்த காற்று மாசுபாடு அபாயம் என்ற கட்டத்தை எட்டி இருக்கிறது. ஏற்கனவே டெல்லியில் நாளை முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் காற்று மாசுபாடு தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “காற்று மாசு அதிகரிப்பு மற்றும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி அரசின் ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் அலுவலகத்தை இயக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “அதேபோல, சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள், அலுவலகங்களுக்கான நேரங்களுக்கான திட்டத்தை வருவாய் ஆணையர்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காற்று மாசு கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழுவை டெல்லி அரசு அமைத்துள்ளது” என்று கூறினார்.







