கவுன்சிலர்கள் மோதல் காரணமாக டெல்லியில் மேயர், துணை மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி 104 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேயரை தேர்வு செய்வதற்காக கடந்த ஜனவரி 6-ம் தேதி மாநகராட்சி கூட்டம் கூடியது. மேயர் தேர்வில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்த போதிலும், பாஜகவும் தன்னுடைய தரப்பில் வேட்பாளரை நிறுத்தி அதிர்ச்சியூட்டியது. இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும் 10 நியமன உறுப்பினர்களையும் மேயர் தேர்தலை நடத்த தற்காலிக அவைத்தலைவராக பாஜக கவுன்சிலர் சத்யா சர்மாவையும் துணை நிலை ஆளுநர் நியமித்தார்.
10 நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றாலும் டெல்லி அரசின் ஒப்புதலின்றி பரிந்துரைத்ததாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு எழுப்பியது. இதனால் நியமன உறுப்பினர்களை பதவியேற்க விடாமல் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு பாஜக, ஆம் ஆத்மி கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது. பின்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை மீண்டும் மாநகராட்சி கூட்டம் கூடியது. பதவியேற்காத உறுப்பினர்கள் பதவியேற்றனர். ஆனால் இன்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் மேயர் தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.