டெல்லியில் ஏற்கனவே அமலிலிருந்த 6 நாள் ஊடரங்கு வருகின்ற 3 ஆம் தேதி காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அறிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.49 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் நேற்றைய நிலவரப்படி 24,331 பேர் புதிதாக கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 348 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் உள்ள இடுகாட்டில் ஒட்டுமொத்தமாக எரியூட்டப்பட்ட உடல்களை, ராய்ட்டர்ஸ் செய்து நிறுவனம் கழுகுப்பார்வையில் புகைப்படம் எடுத்தது. இந்த புகைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு மே 3 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தெரிவித்துள்ளார். மேலும் ஆக்சிஜன் விநியோகத்திற்கு ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆக்சிஜன் இருப்பு குறித்த தகவல்கள் அதில் பதிவேற்றப்படும் என்றும் அரவிந்த் கெஜிரிவால் தெரிவித்துள்ளார்.







