இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (மார்ச் 16) உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் புகழேந்தி தொடர்ந்த மனுவில் நாளை (மார்ச் 16) எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என ட்எல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். முன்னதாக இந்த மனு மீது இன்று (மார்ச் 15) உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது நாளை உத்தரவு பிறக்கப்படுகிறது.
முதலமைச்சராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016, டிசம்பர் 5-இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, ஈபிஎஸ்-ஓபிஎஸ் என இரு அணிகளாக அதிமுக பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







