பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு, முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார், 23 வயதான சாகர் ராணா என்ற மல்யுத்த வீரரைக் கடத்திச்சென்று நண்பர்களுடன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சத்ராஸல் அரங்கில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார் சாகர்.
இதையடுத்து அவருடைய மற்றொரு நண்பர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், சுஷில்குமார் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.
இந்நிலையில் சுஷில் குமார் தலைமறைவானார். அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால், சுஷில் குமார் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத வகையில், அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த செசன்ஸ் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஜகதீஷ் குமார், முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.







