அலங்கார ஊர்தி விவகாரம்: அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு கி.வீரமணி அழைப்பு

குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்…

குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் உட்பட தலைவர்கள் எல்லோரும் கண்டனம் தெரிவித்திருந்தாலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலை ஒலிக்கும் வகையில் அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் அணிவகுக்கும் குடியரசு நாளன்று (26.01.2022) தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி அலுவலகங்களின் வாயிலிலும், வீடுகளின் முன்பாகவும் தனி நபர் இடைவெளி விட்டு, அணிவகுத்து நின்று தமிழ்நாட்டு மக்களின் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் கண்டனக் குரலை எழுப்பும் அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் கட்சிகளுக்கு அப்பால் உள்ள சமூக அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும்கூட இத்தகைய ஆர்ப்பாட்டத்தை நடத்தி, தமிழ்நாட்டின் ஒத்தக் குரலை எழுப்புமாறு கனிவுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். “இந்தியா ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட நாடு அல்ல; பன்முகக் கலாச்சாரங்களை, மொழி, நாகரிகம், பண்பாட்டை உள்ளடக்கிய நாடு என்பதை வெளிப்படுத்த இதுவே சரியான தருணமாகும்” என திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.