அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வீசிய சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் பல மாகாணங்கள் பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் மீண்டும் சூறாவளி வீசியது. இதனால் ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிஸ்ஸிசிப்பி உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : ஆங்கிலம் பயன்படுத்தினால் அபராதம்! – இத்தாலி அரசின் அதிரடி முடிவு
ஆர்கான்சாஸ் மாகாணத்தில் தாக்கிய சூறாவளிக்கு பல்வேறு மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பல குடியிருப்புகள் தரைமட்டமாகி, வாகனங்கள் புரட்டி போடப்பட்டன. பல வீடுகளின் மேற்கூரை சூறாவளியில் தூக்கி வீசப்பட்டது.
இந்த பயங்கர சூறாவளியால் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. சூறாவளியால் தாக்கப்பட்ட மிஸ்ஸிசிப்பி மாகாணத்திற்கு நேரில் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஆறுதல் கூறினார்.







