மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அவரது அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு தொலைப்பேசி மூலம் 3 முறை தொடர்பு கொண்ட மர்ம நபர், நிதின் கட்கரியை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் நிதின் கட்கரியின் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திலிருந்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இல்லத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.







