“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்டோபர் 25ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த செப். 1 அன்று மத்திய அரசு உத்தரவிட்டது.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலர் ரீட்டா வசிஷ்டா என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே இந்தக் குழுவில் இடம்பெறாதது குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது.
இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் “ ஒரே நாடு ஒரே தேர்தலை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இது கூட்டாட்சியின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.. இதைச் செயல்படுத்தக்BJP குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பாஜகவில் போதியளவில் எம்பிக்கள் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும். இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மாயையை முன்வைத்து உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்டோபர் 25ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய சட்ட திருத்தங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







